Friday, December 25, 2015

மனதை நனைத்ததா மழை ?

மண்ணில் இறங்கிய மழை சற்று அனைவரின் மனதையும் நனைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.மண்ணில் மழை விழுந்தால் செடி முளைக்கும்.. மனதில் விழுந்ததால் சில எண்ணங்கள் முளைத்தன ..

நடைமுறைக்கு வந்த மனிதாபிமானம்

மழைக்கு பிறகு வந்த பல பத்திரிக்கை தலையங்கங்களில்  "மழை மீட்டெடுத்த மனிதம்", "இயற்க்கையை வென்ற இளைஞர்கள்" என்று இப்படி பலவற்றை  பார்க்க நேர்ந்தது. ஆம் நம் சமுதாயத்தில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் நல்ல தனத்தை தங்களுக்குள்ளே  பூட்டி வைத்து பல காரணங்களுக்காக வெளிகொனராதவர்கள் . சமுதாயத்தில் நடக்கிற அநியாயங்கள், ஏற்ற தாழ்வுகள் , அரசாங்கத்தின் மெத்தனங்கள் அனைத்தையும் பார்த்து மனம் புழுங்குபவர்கள் ஆனால் அதனை டீ கடையில் அங்கலாய்ப்பதோடு அவர்களின் எதிர்ப்பை காட்டிவிட்டு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு சென்று விடுபவர்கள் . நானும் இவர்களில் ஒருவனே .
ஆனால்  இயற்கையின் உக்கிரத்துக்கு முன்னால் அனைவரும் கை கோர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். அனைத்து கரங்களும் நீண்டன! அன்பு மலர்ந்தது .

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
 ஆற்றில் பிறந்த நாகரிகம், என்று தான் தோன்றிய மூலஆதாரங்களை அழிக்கிறபோது, தன் தலை மீது தானே  கை வைக்கிறோம் என்ற உணர்வில்லாமல் இது போன்ற அழிவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இயற்கையை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை நகர்ப் புற மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிராமத்தில் ஓரளவிற்கு இன்னும் இயற்கையோடு இணைந்து வாழும் பண்பை மறக்கவில்லை. இன்னொரு விடயம் அவர்கள் தங்கள் வேலைகளையும்  தங்கள் சுற்றுபுரத்தின் தேவைகளையும் ஓரளவிற்கு தாங்களே பார்த்துக் கொள்ளும் திறன் உடையவர்கள்.  நகர் புறத்தில் அனைத்திற்கும் அரசாங்கத்தை நம்பி இருப்பதன் விளைவால் இது போன்ற அவசர கால சூழ்நிலைகளில் தன்னிச்சையாக செயல் பட பழக்கம் இல்லாதவர்களாக பெரும்பாலனவர்கள் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது.

காலநிலைக்கு ஏற்ப உணவுப் பொருட்களை சேகரித்து வைக்க வேண்டும் என்பது சிறு எறும்பிற்கும் தெரியும் போது நாம் ஏன் மறந்து போனோம்.  சென்னையில் வெள்ளம் பெரிதும் பாதிக்காத இடங்களிலும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் சமைப்பதற்கு தேவையான உணவுப்பொருட்கள் இல்லாமல் திண்டாடியதன் காரணமென்ன? பணத்தின் மீது மட்டும் இருந்த நம்பிக்கை, எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பணத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை. கையில் கரண்சி வைத்திருந்தவர்களுக்கே இந்த அவலம் என்றால்,  கடவு எண்  போட்டு ATM பெட்டிக்குள் வைத்திருந்தவர்களின் நிலைமையை நாம் அறிவோம்?  இயற்கையை புரிந்து கொண்டு அதனோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வழிக்கு மீண்டும் செல்வோம்.

இலவசமா அல்லது Infrastructure-ஆ?

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இன்னும் சில மாதங்களில் நடக்கப் போகும் தேர்தலை நாம் எப்படி பார்க்கப் போகிறோம் ? 
ஓட்டு  கேட்டு வரப்போகிரவர்களிடம் எதை எதிர் பார்க்கப் போகிறோம்? வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மிக்சி , கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி போன்றவைக்கு பதிலாக மீண்டும் விலையில்லா புதிதான ஒன்றா ?

 பல பேரின் கேள்வி இது போன்ற இலவசங்களுக்கு செலவளிக்கப்பட்ட தொகை கட்டமைப்பு வசதிகளுக்கு செலவளிக்கபட்டிருந்தால் ஒருவேளை இது போன்ற இயற்கை இடர்களை எதிர்கொள்வது எளிதாக இருந்திருக்கும் என்பது தான் ?
 இது போன்ற பொருட்களின் வாழ்நாள் மிஞ்சிப் போனால் மூன்று வருடங்கள் , ஆனால் இது போன்ற பணம் நிரந்தர கட்டமைப்பு வசதிகளுக்கு பயன் பட்டிருந்தால் ஒரு 50 ஆண்டுகள் நிரந்தரமான ஒரு திட்டம் இருக்கும் என்ற எண்ணம் வர வேண்டும்.  மெட்ரோ ரயில் வந்து விட்ட காரணத்தால் சென்னை முழுமையான மெட்ரோபாலிடன்  நகரமாக மாறிவிட்டதாக நினைத்து விட்டோமா ? சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் எத்தனை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும் பயன் கிட்டுமா ?

 இதைவிட கேவலம் 500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் தன்  ஓட்டை விற்று அதே நாளில் டாஸ்மாக்கில் இழந்து அடுத்த ஐந்து ஆண்டு முன்னேற்றத்தை 
 ஏலம் விட்டு நிற்கும் அவலம் இனி நடக்காமல் பார்த்து கொள்வோமா ?

தொலை நோக்கு திட்டங்களை முன் வைப்போருக்கே நம் ஒட்டு என்று நமக்கு  முதலிலே தொலை நோக்கு வேண்டும், அப்போது தான் அடுத்த பத்து ஆண்டுகளிலாவது வளாச்சி என்பது சாத்தியம். இந்த எண்ணத்தை படித்தவர்களாகிய  நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்திலும் நம் ஊரில் உள்ள நம் அண்டை வீடுகளிலாவது விதைப்போம்.

மனதினை நனைத்ததா மழை ?

மக்கள் மாறிவிட்டார்கள் இனி ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கலாம் என்று ஒரு பெருவாரியானவர்கள் பேசுவதை கேட்க முடிகிறது.

ஆனால் மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் எதிர்கொண்ட ஒரு விடயம் , தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைத்த பின்பும்
 மீண்டும் மீண்டும் வந்தவர்களே வாங்கியதும், மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு இல்லாமல் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

மழைக்கு அடுத்த சில வாரங்களில் வந்த WhatsApp புகைப்படம் ஒன்றில், வெளி வந்த திரைப்படத்தின் போஸ்டரில் தங்கள் ஹீரோவிற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்ததை கண்டபோது மக்கள் மனம் மாறிவிட்டார்களா என்ற ஐயம் எழுகிறது ?

மழை நின்று விட்டது...... எனவே நம் எல்லோர் மனதிலும் முளைத்த இது போன்ற எண்ணங்களுக்கு நாம் தான் நீர் ஊற்ற வேண்டும். இல்லை என்றால் மழையில் முளைத்த காளான்கள் ஆகிவிடும்.